முதலில் பூத்த ரோஜா
தங்கம் மூர்த்தியின்
படைப்பாற்றலின்
வெளிப்பாடாக…
உலகத் தமிழ் மாநாட்டில் ஹைகூ கவிதைகள் பற்றிய ஆய்வரங்கம் நடக்கும் அளவிற்கு தமிழ்க் கவிதை உலகில் ஹைகூவிற்கு ஒரு தனி நாற்காலி கிடைத்திருக்கிறது. அதன் வாமன வடிவம், சுண்டக்காய்ச்சிய மொழி, இரண்டு வரிகளில் அழைத்துக் கொண்டு போய் மூன்றாவது வரியில் கொடுக்கிற அதிர்ச்சி, மகிழ்ச்சி, சோகம், கோபம், கிண்டல், அழகு போன்ற தனிப் பெரும் குணங்களால் ஹைகூ எல்லோரையும் வசியப் படுத்தியிருப்பதில் வியப்பில்லை.என் தொகுப்பையும் சேர்த்து இதுவரை முப்பது ஹைகூ தொகுப்புகள் வெளிவந்திருக்கலாம். ஒரு யூகம்தான் இவைகளை சுஜாதாவிடம் காண்பித்து “அசல் ஹை-கூ” எது என்று கேட்டாலோ அல்லது 7.5.7. என்று மீட்டர் வைத்து அளந்தாலோ அல்லது ஜப்பானிய இலக்கண மரபுப்படிப் பார்த்தாலோ அதிகம் தேறுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் ஜப்பானிய ஹைகூ மொழி பெயர்ப்புகள் இயற்கையையும், நான்கு பருவங்காலங்களின் மாற்றம் பற்றி மட்டுமே இருக்கின்றன. அதை காலத்திற்கேற்ப மாற்றி அதன் வடிவத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, அதில் இயற்கையையும், சமூகக் காட்சிகளையும் சாட்டையடி விமர்சனங்களையும் படம் பிடித்தது தமிழில் தான் என்று கருதுகிறேன்.
அதுபோலத்தான் என்னை பாதித்த, கவர்ந்த, கோபமூட்டிய, அதிர்ச்சிக் குள்ளாக்கிய, இனித்த, கசந்த, விரும்பிய, விரும்பாத பலவும் கவிதைகளாக வந்திருக்கின்றன.
இதில் அசல் எது, அற்புதம் எது என்பதையெல்லாம் வாசிக்கிற நீங்கள் தான் யோசிக்க வேண்டும்!
0 Comments