- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்தும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்று மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரின் நன்மைகள் குறித்தும் தற்போது பரவி வரும் காய்ச்சலில் இருந்து விடுபட என்னென்ன நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அரசு மாவட்ட சித்த மருத்துவ கல்லூரி சித்த மருத்துவர் வனஜா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் சலீம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு நீர் வழங்கி டெங்கு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். சித்த மருத்துவ அலுவலர் சரவணன் “இன்றைக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் குணப்படுத்த தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது வெறும் நிலவேம்பினால் மட்டும் தயாரிக்கப்பட்டதில்லை. அதில் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுக்கு, பாற்படம், வெட்டிவேர், விலாமிச்சை, கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், மிளகு, சந்தனம் ஆகிய மூலிகைகள் அடங்கியது நிலவேம்பு நீர். நிலவேம்பு நீர் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வீடுகளில் மற்றும் பக்கத்து வீடுகளில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி காய்ச்சலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். விழாவில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, மேலாளர் ராஜா மற்றும் உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு நீரினை குழந்தைகளுக்கு வழங்கினார்கள். தமிழாசிரியர் கணியன் செல்வராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.