Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு மணி நேரம் தொடர்ந்து 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்தனர்.

கரூர் சின்ன தாராபுரத்தில் வாழ்ந்தவரும் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களுக்கு செய்யுள் வடிவத்தில் உரை எழுதியவருமான பாட்டுரைப் பாவலர் இறையரசனார் அவர்கள் நினைவாக சிங்கப்பூரில் வசித்துவரும் இறையனார் மகனார் இறை மதியழகன் அவரது தந்தையார் நினைவு நாளான ஆகஸ்டு 27ஐ முன்னிட்டு பள்ளி மாணவர்களை திருக்குறள் முற்றோதல் செய்ய ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அ. ஆண்டனி ஜெனிஷா, மு. லோகஸ்ரீ, பத்தாம் வகுப்பு மாணவர்கள் சி. அவினாஷ், உ. உதயரிஷ்னியா, பதினோறாம் வகுப்பு மாணவி க. ராகவி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்  செ. ராகவி, சு. கோபிகாஸ்ரீ, ப. திவ்ய ஸ்ரீ, ச. ஸ்ரீ ஹாசினி, பீ. முகமது பயாஸ் ஆகிய 10 மாணவர்கள் பள்ளி நூலகத்தில் அமர்ந்து நான்கு மணி நேரம் தொடர்ந்து 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் வீதம் 1330 ரூபாய் ரொக்கப்பரிசும் அழகிய சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதுபற்றி பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது “கோவில்களில் திருவாசகம், திருமந்திரம் முற்றோதல் நடைபெறும். அதுபோல பள்ளிகளில் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் செய்ய வேண்டுமென சிங்கப்பூரில் வசிக்கும் இறையனார் மகனார் இறை மதியழகன் கூறிய போது அதை உடனே வரவேற்று எங்கள் பள்ளி மாணவர்களை திருக்குறள் முற்றோதல் செய்ய வைத்தோம். இதன்மூலம் பாடப்புத்தகத்தில் மனப்பாடப் பாடலாக வாசித்த திருக்குறளை வாழ்க்கை முழுவதும் வாசிக்கவும் நேசிக்கவும். குறள்வழி வாழவும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் இயக்குநர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல், மேல்நிலை ஆங்கிலத்துறைத் தலைவர் தனலெட்சுமி, ஆசிரியர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.