Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2023 வை முன்னிட்டு; வரவேற்புக்குழுத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு 6-07-2023 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்கள், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், கண்ணதாசன் கவிதைகளையும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கந்தர்வன் சிறுகதைகளையும் சிறுவர் கதை களஞ்சியம் போன்ற தங்களுக்குப் பிடித்தமான நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.
பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை, அறிவை, சான்றோர்களின் அனுபவங்களை அறிந்து தெளிவு பெற முடியும். இளமையில் கல் என்ற வாக்கிற்கிணங்க வாசிக்கும் பழக்கத்தை அறிய, நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், செல்வராஜ்,ராமன் உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி மற்றும் பெரும்பாலான ஆசிரியகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.