- This event has passed.
“உங்களைவிடவும் பெருங்கனவுகளோடு பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்”
பள்ளி விழாவில் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய கவிஞர் மனுஷி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கர் விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் மனுஷி கலந்தகொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “இந்த மழலை மாணவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இதுமாதிரி கோட்டுப்போட்டு, தலையில் தொப்பிவைத்து பட்டம் வாங்குகிற கனவோடு நான் எம்.ஏ. படித்து முடிக்கிற வரையில் காத்திருந்தேன். ஆனால் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். மழலையாக இருக்கும்போதே பட்டமளித்து சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்தப் பள்ளியில் நானும் படித்திருக்கலாமோ என்று தோணுகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சில தியாகங்களை செய்தே ஆகவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது டிவி சீரியல் பார்த்தீர்கள் என்றால் அவர்களும் ஹோம் ஒர்க் நோட்டை விரித்துவைத்துக்கொண்டு டீவியைத்தான் பார்த்துக்ககொண்டிருப்பார்கள். மாறாக நீங்களும் அவர்களோடு சேர்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அவர்களும் உற்சாகமாகி படிக்கத் தொடங்குவார்கள். பெற்றோர்கள் தங்கள் கனவுகளையெல்லாம் பிள்ளைகளிடம் திணித்து டாக்டராக, எஞ்சினியராக, கலெக்டராக ஆகவேண்டுமென வற்புறுத்தாதீர்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைகள் உங்களை விடவும் பெருங்கனவுகளோடு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிகாரம் செய்யக்கூடாது. அவர்களை உலகிற்கு வர வைப்பதற்கான கருவி மட்டுமே நீங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள்தான் வாழ்ந்தாக வேண்டும். குழந்தைகளை கொஞ்சுங்கள், கொண்டாடுங்கள். அழகிய படங்களோடு கூடிய கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அவர்களாகவே இந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆற்றலோடு தயாராவார்கள். என்று பேசினார். விழாவில் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி மற்றும் துணைமுதல்வர் குமாரவேல், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் மகாத்மா ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வசுமதி மற்றும் ஆசிரியப்பெருமக்கள் கலந்துகொண்டு பட்டம்பெற்ற மழலைகளை வாழ்த்தினர்.